சிறுபான்மையினர் ஆதரவு இல்லாமல் வெல்ல முடியாது என்பதை உணர்த்துவோம்

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நாட்டின் எதிர்காலத் தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள் அமைதியாகவோ, அலட்சியமாகவோ இருந்துவிடக் கூடாது.
கடந்த காலங்களில் எமது மத ஸ்தலங்களை நொருக்கியவர்கள், உரிமைகளை பறித்தெடுத்தவர்கள், வியாபார ஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியை தொலைத்தவர்கள் அனைவரும் கோட்டாபயவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர்.
இவர்களின் கனவுகளை சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களான நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். எனவே இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெற்றியடையச் செய்யுங்கள்!
சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரிய வெற்றியை பெறுவார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான இந்த தேர்தலில் நியாயம் வெல்லவேண்டும், நீதி வாழவேண்டும்.
இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். நமது சமூகத்தை அழிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குகேட்டு வருகின்றார்கள். போதாக்குறைக்கு அவர்களது முகவர்களை வடக்கு கிழக்குக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்கு கேட்கமுடியாது போய்விட்டாலும் நீங்கள் உணர்ந்து வாக்களியுங்கள். சஜித் பிரேமதாசாவை வெல்லவைப்பதன் மூலம் எமது எதிர்காலம் எமது மண்ணின் எதிர்காலம் சிறக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று தெரிவித்தார்.

No comments