நடிகர்களை நம்பிவிடாதீர்கள்


கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரிசாட் பதியூதீன் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதத்தை வளர்த்தவர்கள் தேர்தலில் வெல்லுவதற்காக நம் மீது பரிவு காட்டுகிறார்கள்.
இந்த நடிகர்களின் பசப்பு வார்த்தைகளில் நம்பி, பெறுமதியான வாக்குகளை சீரழித்து விடாதீர்கள்.
வர்த்தகர்கள் சிலரை கைக்குள் வைத்துக்கொண்டு சமூகத்தின் ஏழ்மையை பயன்படுத்தி, பணத்தை கொட்டி வாக்குகளை பெறுவதற்கு பிரயத்தனம் செய்கின்றனர்.  மிகவும் தந்திரமாக நமக்குள் ஊடுருவி சாதிக்க பார்க்கின்றனர்.
இந்த கூட்டத்தினரின் கடந்த கால ஆட்சி, நிர்வாக முறை, ஜனநாயகம் தொடர்பான இவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியும். முதல் ஐந்து வருடத்தில் காட்டிய நிதானம் அடுத்த ஐந்து வருடத்தில் காணாமல் போய் விட்டது.
மேலும் சிறுபான்மை மக்களை துளியளவும் கணக்கில் எடுக்காத இவர்களின் செயற்பாடுதான் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் உயிரூட்டியது.
பேருவளை, அளுத்கமை தர்கா நகர் ஆகிய பிரதேசங்களே இந்த இனவாதங்களுக்கு முதலில் இரையானது. உங்களை இலக்கு வைத்து எல்லாவற்றையும் அழித்தனர்.
ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், அவற்றை எல்லாம் மறந்து உங்களை பிழையாக வழி நடத்த பார்க்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments