வெற்றிடத்தை நிரப்புவதுதான் ஆளுமையா! ரஜினியை வெளுத்துவாங்கும் சீமான்;

நான் என் இனச்சவைக் கண்டு வந்தவன், நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்றிடத்தை நிரப்புவதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார் என ரஜினிகாந்தை நாம்தமிழர் கட்சி சீமான் கடுமையாக பேசியுள்ளார்.

அண்மையில் “நடிகர்கள் வயதானபிறகு வாய்ப்புகள் குறைவதால் சினிமாவுக்கு வருகிறார்கள்”என்று தமிழக முதலமையர் எடப்பாடி குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் ஊடகவியலாளர்களிடம்  பேசிய சீமான், “நடிகர்கள் வயதான பிறகே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதல்வரின் கருத்தோடு உடன்படுகிறேன். அதேநேரம் எம்.ஜி.ஆர்-சிவாஜி அரசியலை ஒப்பிடக் கூடாது என்று கூறினார்.
“சிவாஜி உலகத்தின் மாபெரும் திரையாளுமை. அவருக்கு எம்.ஜி.ஆரைப் போல அரசியல் எதிர்பார்ப்போ நுட்பமோ இல்லை. எம்.ஜி.ஆரிடம் சினிமாவில் இருந்தபோதே அரசியலுக்கான நீண்ட கால செயல் திட்டம் இருந்தது. அவர் நடிக்கும்போதே திமுகவில் இருந்தார். அண்ணாவைப் பற்றியே திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். விவசாயியாக நடித்தார், ரிக்‌ஷா காரராக நடித்தார், படகோட்டியில் மீனவராக நடித்தார். அந்த மாதிரி ஒவ்வொரு மக்களையும் கவர்ந்து நீண்ட கால செயல் திட்டத்தோடு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரையும் சிவாஜியையும் ஒப்பிடக் கூடாது” என்று கூறிய சீமான்,
“என் மீதோ திருவள்ளுவர் மீதோ காவிச் சாயம் பூச முடியாது என்ற நிலைப்பாட்டில் ரஜினி நிலையாக நின்றாரா? அரைமணி நேரம் கூட நிற்க முடியவில்லை. மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து பூசி மெழுகினார். விஜயகாந்த் பாராட்டுக்குரியவர். ஏனென்றால் அவர் ஜெயலலிதா, கருணாநிதி அதிகார ஆளுமையோடு இருக்கும்போது நான் ஒரு மாற்றாக வருவேன் என்று சொன்னார். அதற்கு ஒரு ஆளுமை, துணிச்சல், ஆண்மை வேண்டும். நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தேன் என்று சொன்னால் என் இனச்சாவை கண்டு சகிக்க முடியாமல் அதற்கான அரசியலை முன்னெடுத்தோம். அவர்கள் இருக்கும்போதே எதிர்த்து வேலை செய்தோம்.
ஆனால் ரஜினி யாருமில்லாத பொட்டலில் கம்பெடுத்துக் கொண்டு யார் என்னோட சண்டைக்கு வர்றது என்று கூப்பிடுவது எப்படி சரியான வீரமாக இருக்கும்? வெற்றிடம் இப்போது இருக்கு என்கிறார். அப்படியென்றால் வெற்றிடம் இல்லையென்றால் வந்திருக்க மாட்டார் அல்லவா? அது எந்த மாதிரியான ஆளுமை? ஆளுமையைப் பற்றி ரஜினி பேசக் கூடாது” என்றார் சீமான்.

No comments