கோர விபத்தால் வெடித்த போராட்டம் - சமரசம்

யாழ்ப்பாணம் - அன்னசந்தி வீதியில் இன்று காலை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பான கடவை அமைத்துதருமாறு அப்பகுதி மக்கள் இணைந்து ரயில் தண்டவாளத்துக்கு குறுக்கே மறியலை ஏற்படுத்தி போராட்டம் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம்  இங்கு சமிக்ஞை விளக்கு,ரயில்வே கேட் அமைத்து தருமாறு பலமுறை ரயில்வே திணைக்களத்திடம் கோரிய போதும் இதுவரை இங்கு அமைக்கப்படவில்லை என பொலிஸாரிடம் முறையிட்டனர்.

இதன்போது யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் சமரசம் பேசி தாம் இங்கு பாாதுகாப்பு கடவையாக சமிக்ஞை விளக்கு அமைத்து தர தாம் சம்மதிப்பதாகவும் சமரசம் செய்தனர். அத்துடன் அங்கு வந்த ரயில்வே காட் இருவர் கொழும்பில் ரயில்வே திணைக்கள உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் பேசி இங்கு சமிக்ஞை விளக்கு அமைப்பது பற்றி பொலிஸாருடன் பேசினார்.

இங்கு தாம் சமிக்ஞை விளக்கு , கேட் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாவும் சில வாரங்களில் அமைக்கப்படும் என  அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து யாழ்.உதவி பொலிஸ்  அத்தியட்சகர்  தாம் இங்கு இருவரை ரயில்வே  கடவை காப்பாளர்களை   நியமிப்பதாக தெரிவித்து அங்கு நின்ற மக்களுக்கு உறுதியளித்து சமரசப்படுத்தினார்.

இதையடுத்து தண்டவாளத்தில் குறுக்கே போடப்பட்ட தடையினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றினர்.

இதேவேளை போராட்டம் இடம்பெற்ற வேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குளிரூட்டிய ரயில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு செல்லமுடியாது யாழ்ப்பாணம் ரயில்நிலையத்துடன் நிறுத்தப்பட்டது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கும் இடையே இருந்த புகையிர நிலையத்தில் இந்த ரயிலுக்கு காத்திருந்தவர்கள் விசேட பஸ் ஒழுங்கு செய்து அதில் ஏற்றி வந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து குளிரூட்டிய ரயில் புறப்பட்டு சென்றது.


No comments