கடத்தல் வழக்கில் நித்தியானந்த சீடர்கள் கைது!

அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்களது இரு பிள்ளைகளைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக ஜனார்தனன் சர்மா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதுபோன்று இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இரு நாட்களுக்குப் பிறகு நேற்று (நவம்பர் 19) நித்யானந்தா உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறப்பு விசாரணை குழுவினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு வைத்திருப்பதாகக் கூறப்படும் ஜனார்த்தனன் சர்மாவின் மகள், லோபமுத்ரா ஷர்மா, மா நித்ய தத்வபிரியா ஆனந்தா என்ற தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை இன்று (நவம்பர் 20) வெளியிட்டுள்ளார். அதில், ”நான் மேஜர். இந்தியச் சட்டங்களின் படி அனைத்து முடிவுகளையும் எடுக்க எனக்கு உரிமை உண்டு. 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் என்னையும், எனது சகோதரியையும், ஆசிரமத்தையும் துன்புறுத்துகின்றனர். நான் திரிநாத்தில் இருக்கிறேன். ஏற்கனவே போலீசை தொடர்பு கொண்டு, நான் கடத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டேன். நான் கடத்தப்பட்டிருக்கிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், என்னிடம் பேச விரும்பினால் திரிநாத் அல்லது டொபாகோவில் வந்து என்னைப் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஆசிரமத்தில் கொடுக்கும் அழுத்தத்தின் பேரில் லோபமுத்ரா ஷர்மா இவ்வாறு வீடியோ வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரம பெண் நிர்வாகிகள் ப்ராணபிரியா மற்றும் பிரிய தத்துவா உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments