ஆட்களை சுடுவதா?பதறும் கோத்தா!


முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நிரூபிக்கப்படுமாயின், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.
அந்த பதிவில், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தொடர்பில் வருத்தமடைகின்றேன். இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் இது தொடர்பில் உரிய பிரிவுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதனை முதன்மையாக கருதும் எனது கொள்கையை மீண்டும் உறுதி செய்கிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் நேற்று (06) இரவு நேற்றிரவு 8.30 நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து  2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பகுதியிலிருந்து 3 வெற்றுத்தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் கரவனெல்ல மற்றும் கினிகத்ஹேன வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் வாகனம் வழிமறிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments