கண்டலடி துயிலுமில்ல நினைவேந்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் நேற்று (27) மாலை 6.05 மணிக்கு மழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாங்கேணியைச் சேர்ந்த நான்கு உறவுகளை உயிர் தியாகம் செய்த வேலன் தங்கம்மா (வயது-77) என்ற தாயினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலநேசன், கி.சேயோன், வ.சுரேந்திரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்பாட்டாளர்களினால் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, கண்டலடி ஆகிய நான்கு இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

No comments