வவுனியாவில் தமிழரசுக்கு தலையிடி?


வவுனியாவில் இடம்பெறும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்ட மண்டபத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்றுகையிட்டமையால் பொலிசார் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது மற்றும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றை இன்று காலை 10.30 முதல் மாலை வரை மேற்கொண்டது.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், துரைரெட்ணசிங்கம், யாழ் மாநகர சபை மேயர் ஆர்னோல்ட், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் கனடா  கிளை பிரமுகர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்  மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வவுனியாவில் 988 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட்ட மண்டபத்தை முற்றுகையிட முனைந்தனர். இதன்போது கூட்ட விடுதிக்கு செல்லும் பாதையை 50 மீற்றர் தூரத்தில் வழிமறித்து பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், அவர்களை உள்ளே செல்ல விடாது பொலிசார் தடுத்தனர்.
இதன்போது சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரிடம் 5 கேள்விக்கள் கேட்ட வேண்டும். எமக்கு சம்பந்தன் தந்த வாக்குறுதி என்னவாச்சு, காணாமல் போன எமது பிள்ளைகளுக்கு பதில் கூறு, பணப்பெட்டிகளுக்காக வாக்குகளை சிங்களவருக்கு கொடுக்காதே, தமிழனுக்கு வாக்களிக்க கூறு, மாவைக்கு சொகுசு வீடு எங்களுக்கு போராட்ட வாழ்க்கை, சம்பந்தன் சுகபோகம் நாங்கள் வீதியோரம் எனக் கதறியழுதனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இருப்பினும் நீண்ட நேரமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆபகியோரை சந்திக்குமாறு கோரி அங்கு நின்ற போதும் அவர்கள் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments