அரச பலவீனத்தால் அடிப்படைவாதிகள் தலை தூக்கினர்

பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக எவ்வித அடிப்படை தகைமைளும் அற்ற அமைச்சரவையினால் தேசிய பாதுகாப்பினை ஒருபோதும் பலப்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொட நகரில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய பாதுகாப்பிற்கு பாரிய சேவையாற்றிய இராணுவத்தினரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டமையினால் மக்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பலவீனத்தினை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்தி தங்களின் நோக்கத்தினை நிறைவேற்றிக் கொண்டார்கள். எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் மீண்டும் பலப்படுத்தப்படுவார்கள்.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் அரசியல் பகைமையே, இதனால் தேசிய பொருளாதாரமும் மறுபுறம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பாரம்பரிய விவசாய உற்பத்திகளுக்கு கடந்த நான்கரை வருட காலமாக உரிய நிலை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். விவசாய துறை அடைந்துள்ள வீழ்ச்சி நிலையில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
மீள் ஏற்றுமதி மாபியாக்களினால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேயிலை மீள் ஏற்றுமதி செய்வதனால் இலங்கையின் பாரம்பரிய தேயிலை உற்பத்தி உலக சந்தையில் பெற்றிருந்த பெறுமதி தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இழக்கப்பட்டுள்ள பெயர், தரம் மீண்டும் சர்வதேச சந்தையில் பெற்றுக் கொடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments