கம்பரெலியாவில் மோசடியாம்:ஈபிடிபி குற்றச்சாட்டு



கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சார்பில் யாழ்.மாநகரில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கம்பரெலிய திட்ட செயற்பாடுகளிலும்  ஒரு வகையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது.


அந்தவகையில் மக்களின் நலன்கள் பாதிக்கப்பட்டதாக அவை முன்னெடுக்கப்படாமையல் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்கள் அனைத்தும் மீளாய்வு செய்யப்பட்டு அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் முன்னாளர் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.



யாழ். மாநகரின் பாதிடு தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில் –



கடந்த காலங்களில் நாம் மாநகரின் ஆட்சி அதிகாரங்களை முன்னெடுத்திருந்த போது மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஒவ்வொரு திட்டங்களையும் சபையின் அங்கீகாரத்தை பெற்றே செயல்வடிவு கொடுத்திருந்தோம். ஆனால் இன்று அவ்வாறு நடைபெறுவதில்லை.



இவ்வாறான தன்னிச்சையான நடவடிக்கைகளால் மக்களின் தேவைப்பாடுகள் நிறைவு செய்யப்படாது ஒருசிலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் அதன் பிரதிபலிப்புகளுமே யாழ் மாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.



அந்தவகையில் ஒன்றுதான் இந்த கம்பரெலிய திட்டமும். இத்திட்டமானது சபையின் பார்வைக்கோ அனுமதிக்கோ கொண்டுவரப்படவில்லை. தன்னிச்சையாகவே முன்னெடுக்கப் பட்டிருந்தன. இத்திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் நாளாந்தம் குறை கூறிவருவதை அவதானிக்க முடிகின்றது.



அந்தவகையில் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் கம்பரெலிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆய்வுசெய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

No comments