நீங்கள் சிங்களத் தலைவர்களை நம்ப மாட்டீர்கள்

50 வருட பாதிப்புகளை ஒருபோதும் 5 வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியாது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை என்னால் நேரடியாக உணர்ந்துகொள்ள முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். மேலும்,

சுனாமி தாக்கத்திற்குப் பின்னர், யாழில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கியிருந்தார்கள். எனினும் எமது ஜனாதிபதி காலம் நிறைவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த அரசாங்கம், அபிவிருத்திகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, யுத்தத்தை மட்டும் மேற்கொண்டனர்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் 2015ஆம் ஆண்டுவரை மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் யாழிற்கான எந்தவொரு அபிவிருத்திகளையும் செய்யவில்லை 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பல்வேறு செயற்பாடுகளை இங்கு முன்னெடுத்தோம். ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். எஞ்சியுள்ள காணிகளை விரைவில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல், ஆயிரக்கணக்கான வீடுகளையும் நிர்மாணித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளோம். இந்த செயற்பாடுகளை நாம் எதிர்காலத்திலும் சிறப்பாக முன்னெடுப்போம். நானும், இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான். எனது தந்தை மற்றும் கணவரை நான் இதனால்தான் இழந்தேன். எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவிக்கும் வேதனையை நான் நன்கு உணர்வேன்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்த செயற்பாடுகள் இன்னும் போதாது என்பதே உண்மையாகும். 50 வருட பாதிப்புக்களை ஒருபோதும் 5 வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியாது. இந்த அரசாங்கத்தில் குறைகள் உள்ளமை உண்மைதான். தமிழ் மக்களுக்கு ஒரு ஆண்டுக்குள் தீர்வு தருவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் சிங்களத் தலைவர்களை ஒருபோதும் நம்ப மாட்டீர்கள். அவர்கள் பொய் பேசுவதாக சிந்திப்பீர்கள்.

ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மேலும் அவர்களுக்கு நான் ஆட்சியில் இருந்த காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன். பிரபாகரனுடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன். அவர்கள் கேட்டதை கூட வழங்கினேன். ஆனால் அவர் யுத்தம் செய்வேன் என்றார். எனவே தான் யுத்தத்தை ஆரம்பித்தோம் - என்றார்

No comments