சிறிசேனவை காட்டமாக கண்டித்தார் அநுர

2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற றோயல் பார்க் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் முடிவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சட்டவிரோத மற்றும் நியாயமற்ற முடிவு, நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை புறக்கணித்துவிட்டது என கூறியுள்ளார்.
மேலும் “பண ஆட்சியின் செல்வாக்கு காரணமாக அடிப்படை ஜனநாயக கொள்கைகளை சவாலுக்குட்படுத்தும் அழிவுகரமான ஊழல் நிறைந்த ஆட்சியின் விளைவை அனுபவித்து வருகிறோம்.
இலங்கை வரலாற்றில் கொலை குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது இது முதல் முறை அல்ல எனவும் அநுரகுமார திசாநாயக்கவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் சட்ட விதி ஒரு முக்கியமான தூணாகும் என்று தான் நம்புவதாகவும் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
எனவே ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலையீட்டையும் கோரியுள்ளார்.
ராஜகிரியாவில் உள்ள ராயல் பார்க் வீட்டு வளாகத்தில், யுவோன் ஜோன்சன் என்ற 19 வயதான சுவீடன்-இலங்கை வம்சாவளி யுவதியொருவர் ரோயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே தள்ளி விழுத்தி கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட யுவதியின் சகோதரியின் காதலன் ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 12 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து குற்றவாளி சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டபோதும் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மரணதண்டனை குற்றவாளிக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments