உரிமைக்காக போராடுபவர்களுக்கு துணை நிற்போம் - கிரிசாந் சுப்பிரமணியம்

சட்டத்தரணியும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவருமாகிய குமாரவடிவேல் குருபரனுக்கு அவர் வழக்குகளில் முன்னிலையாகி வாதாட முடியாது என்ற யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் முடிவானது இறுதியானதல்ல. அதற்கு மேலும் அடிப்படை உரிமைகள் சார்ந்து இந்த விடயத்தை அவர் எடுத்துச் செல்வார் என்றே தோன்றுகிறது. இராணுவம் அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கான கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்கின்றன.

இவை யாருக்கும் நிகழக் கூடிய ஆபத்து என்பதையே நாம் இப்போது கவனிக்க வேண்டும். ஓர் உயர் கல்வி நிறுவனத்தின் சட்டத்துறையின் தலைவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலென்பது பொதுநல வழக்குகளை வாதாடும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பையும் சம நேரத்தில் கேள்விக்குட்படுத்துவது. அச்சுறுத்துவது.

நாம் இங்கே குருபரனிற்குத் தார்மீக ஆதரவை அளிப்பதென்பது பற்றி பின்வரும் நான்கு அவதானிப்புகளை முன்வைக்கிறேன்.

1 - ஒரு சட்டத்தரணியாகவும் துறைத்தலைவராகவும் அவர் ஏன் தொடர முடியாது ? அப்படி ஏற்கனவே சட்டம் இல்லையென்றால் சட்டத்தை மாற்ற வேண்டியது தான் ஒரே வழி, ஒரே நேரத்தில் ஒருவர் அக்கடமிக் ஆகவும் வழக்காடுபவராகவும் இருப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல் என்பது தெரியவில்லை. அதனை அவருக்கும் பொதுமக்களிற்கும் வெளிப்படுத்த வேண்டியது குறித்த தரப்புகளின் கடமை.

2 - யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் இப்போது நடாத்தி வரும் கலந்துரையாடலுக்கான பொதுத் தளம் மிக முக்கியமானது. பல்கலைக்கழகத்தையும் சமூகத்தையும் இணைக்கும் முக்கியமான செயல். இதில் குருபரனின் பங்களிப்பு பிரதானமானது. நாளை அதையும் மூடுங்கள். படியுப்பியுங்கள் & படியுங்கள் அவ்வளவும் காணும் என்று சொல்வார்கள். இதே வரையறைகளைக் கொண்டு அதனையும் முடக்க முன்வருவார்கள். அதனையும் அனுமதிக்க முடியாது.

3 - " அடையாளம் " கொள்கைக்கான ஆய்வு நிலையத்தின் உருவாக்கத்திலும் அதன் செயற்பாட்டிலும் அவரது பங்களிப்பும் மதிக்கத்தக்கது. தமிழ்த்தரப்பின் அறிவுருவாக்கத்தில் அந்த அமைப்பின் இருப்பு சத்துமிக்கது. அதுக்கும் ஏதாவது பக்கத்தால் வருவார்கள்.

4 - எல்லாவற்றுக்கும் முதன்மையக அவர் தமிழ்த்தேசியத்தின் ஜனநாயகத் தரப்பு, அதனை ஒரு வாதமாகக் கொள்ளாதவர். அது அவருடைய நிலைப்பாடு. அதற்காக அவர் வெறுப்பின் பக்கத்தில் நிற்பவரல்ல. தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான உறவு குறித்து அவர் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளும் தமிழ்த் தேசியத்தை அறிவுபூர்வமாக அணுகும் அவரது போக்கும் முக்கியமானது.

மேலும், ஒரு சட்டத்துறை சார்ந்த ஆளுமையாக இந்தச் சமூகத்தின் இயக்கத்தில் அவரது குரலென்பது அவசியமானது. அவர் n என்பது தான் இராணுவத்தின் பிரச்சினை. இராணுவத்திற்குப் பயந்தோ, ஆணைக்குழுக்களின் முடிவுகளுக்கு அஞ்சியோ ஜனநாயக வெளியை நாம் இழக்க முடியாது. நாம் இப்போது அவருடன் நிற்க வேண்டும். அது அவரது எல்லா நிலைப்பாடுகளுடனும் நிற்பதல்ல. நாம் எல்லோரும் கூட்டாக இயங்கும் வெளியின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் போன்றவை இவ்விவகாரத்தில் தம்  நிலைப்பாடுகளை வெளியிடுவது அவசியம். தங்கள் ஜனநாயக வெளியைக் காப்பாற்றும் முதற்கடமை அவர்களுக்கு இருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் இருக்கும் கொஞ்ச நஞ்ச இணைப்பையும் துண்டிக்கும் செயலாக இதனைக் கவனப்படுத்த வேண்டும். நாளை, மாணவரென்றால் படி, விரிவுரையாளரென்றால் படிப்பி, எதற்காக உனக்குச் சமூக வேலையென்று கேட்கும் காலம் வரும்.

இரண்டாவது, சட்டத்தரணிகள் தரப்பில், மற்றும் கட்சிகளும். இதை ஒரு தனிநபர் பிரச்சினையாகச் சுருக்காமல் பொதுப்பிரச்சினையாக அணுக வேண்டும். தங்களது நிலைப்பாடுகளை உரிய தரப்புகளுக்கு அறிவிக்க வேண்டும். அவர் வழக்காடுவதற்கு இருக்க வேண்டிய உரிமைக்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பொது மக்கள், இது போன்ற நேரத்தில் தங்களது உரிமைகளுக்காக நிற்பவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அதனை வெளிப்படுத்த வேண்டும். அது அவருக்கு மட்டுமல்ல. அவரைப் போன்று பொதுநல வழக்குகளை வாதாடும் பிற விரிவுரையாளர்கள், எதிர்கால சட்டத்தரணிகளுக்கும் நம்பிக்கையை அளிக்கும். இதனைச் செய்யும் தரப்புக்களின் அடாவடி மனநிலைக்கு எதிரான கூட்டு எதிர்ப்பு, நாம் பணிய மறுப்பதை அவர்களுக்குச் சொல்லும். சொல்ல வேண்டும்.

#standwithguruparan

No comments