வவுனியா மின்சார சபை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா, பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் மின்சாரசபை ஊழியர்கள் தமது அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தை சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் அவர்களை சமரசம் செய்ய முற்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று மாலை தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த தாக்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
எனினும் இன்று காலை வரை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தலைமை வகித்தவர் உட்பட இன்னும் பலர் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து வவுனியா மின்சார சபை ஊழியர்கள் பொலிஸாரின் அசமந்தப் போக்கைக் கண்டித்து பணிப் புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய போதைப் பொருள் வியாபாரி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொலிஸாரின் பாதுகாப்புடன் இருந்துவரும் தாக்குதல் குழுவினரை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், அதுவரையில் தமது போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மின்சார சபை ஊழியர்கள் நான்கு பேரை அழைத்து பிரச்சினை தொடர்பாக கதைத்து 24 மணி நேரத்தில் தாக்குதல் நடத்திய குழுவை கைது செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதேவேளை, இதுவரை அவசர தேவைகள் உட்பட அனைத்துப் பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

No comments