தமிழருக்காக கோத்தாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்  தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன்.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு. அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன். - என்றார்.

No comments