கடத்தல் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பவத்தில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்ட நபர்கள்

2008ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை 16 ஆவது சந்தேக நபராக குற்றப்புலனாய்வு பிரிவு பெயரிட்டுள்ளது.

கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த நிலையிலேயே இன்று (15) கோட்டை நீதிவான் முன்னிலையில் சி.ஐ.டி. இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைகளை இடையீட்டு மனுவூடாக சி.ஐ.டி.யால் விசாரணைக்கு எடுக்க கோரப்பட்டது. அதன்படி அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை இந்த விவகாரத்தில் 16 ஆவது சந்தேக நபராக பெயரிட கோரினார்.

அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பிரகாரம், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாரும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோரினார்.

சந்தேக நபராக கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை பெயரிட அனுமதியளித்த நீதிவான், அவரை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியொருவர்‍ ஊடாக மன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.

No comments