தமிழ் தேசிய கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியும்

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கை இணைக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவும் வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.
எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமாது. இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம்.
மேலும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.

No comments