பொலிஸாரின் கவனயீனத்தை எதிர்த்து உண்ணாவிரதம்


கிளிநொச்சி - ஊற்றுப்புலம் சந்தியில் தேனீர் கடை நட த்தி வருகின்ற நபரொருவர் பொலிசாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 13.09.2019 அன்று தனது தேநீர் கடைக்குள் புகுந்து மகனை வாளால் வெட்ட முற்பட்ட ஒருவரை வாளுடன் பிடித்து பொலிசாரிடம் கையளித்த போதும் அவர்கள் போதிய அளவு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனால் நேற்றைய தினமும் (21) 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் தனது தேனீர் கடைக்குள் புகுந்து மகனை வாளால் வெட்டியதோடு கடையினையும் உடைத்து சேதமாகி உள்ளனர்.

எனவே இதற்கு உரிய நீதியான தீர்வை பெற்று தருமாறு கோரியும், பொலிசாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  கந்தசாமி என்கின்ற மாற்றுவலுவுள்ள நபர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு ஆதரவு தெரிவித்து ஊற்றுப்புலம் சந்தியில் வியாபார நிலையங்களை நடத்துகின்ற ஏனையவர்களும் தங்களின் வியாபார நிலையங்களை பூட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊற்றுப்புலம் சந்தியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் அப்பிரதேசத்தில் பொலிஸ் நிலையம்  ஒன்றை அமைக்குமாறும்.வாள்வெட்டு செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அடையாளம் காட்டப்பட்டுள்ள ரவுடிகளை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துமாறும் கோரியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர்  வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்  தாம் அவர்களை விரைவில் சட்டத்தின்முன் நிறுத்துவதாகவும் பொலிஸ் நிலையம் அமைப்பது தொடர்பில் மேலிடத்துக்கு அறிவித்து அதன் பின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் நீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட நபர் தெரிவித்துள்ளார்.

No comments