ஐந்து கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாது விட்டால்; மாற்று வழி என்ன?


ஐந்து பிரதான தமிழ் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் ஒப்பந்தம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அடுத்த கட்டம் என்ன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.

யாழில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “5 தமிழ் கட்சிகள் இணைந்து 13 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளன. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரும் ஏற்காவிட்டால், அதற்கான மாற்றுத் திட்டம் என்ன?

எமக்கு இருவழிகள்தான் உள்ளன. ஒன்று தமிழர் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்குவது. அல்லது நிபந்தனையற்ற ஆதரவை தாங்கள் ஏற்கனவே கூறியவர்களுக்கு வழங்குவது.

இன்றுள்ள நிலையில், கூட்டமைப்பு கூறும் கருத்துக்களை மக்கள் செவிமடுப்பதாக தெரியவில்லை” என மேலும் தெரிவித்தார்.

No comments