தேர்தலில் இருந்து விலக தயார்:சிவாஜி


வடக்கில் ஜந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தயாரித்துள்ள 13 நிபந்தனைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொண்டு, அந்த ஜந்து கட்சிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றனவோ அன்று தான் ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து  உடனடியாக விலகுவதாக சுயேட்சை  வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ச குடும்பத்தை, தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இந்த அராஜகங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளான ராஜபக்ச குடும்பம் தண்டிக்கப்பட வேண்டும். மன்னிக்கக் கூடிய குற்றத்தை ராஜபக்சக்கள் செய்யவில்லை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுமென எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் போர்க் குற்றத்தில் பிரதான குற்றவாளி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய எனப் பலரும் கூறுகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றம் என்பவற்றுக்கு அவரே முழுப்பொறுப்பு. வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த பலரை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ச குடும்பத்தைத் தமிழ் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். குற்றம் புரிந்த அனைவருக்கும் சர்வதேச விசாரணை ஊடாக தண்டனை கிடைக்க வேண்டும் அதற்காகவே நாம் இன்று வரை போராடி வருகின்றோம்.

வடக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்பதனை பொறுத்திருந்து பாருங்கள். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டாபயவை வடக்கில் மூன்றாம் நிலைக்குத் தள்ளும் நிலைமையே உருவாகும். நாட்டில் எந்தப் பாகத்திலும் கோட்டாபய முன்னுக்கு வந்தாலும் வடக்கில் முதலாது அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கவே முடியாதெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments