சிவாஜி மீது நடவடிக்கை எடுக்க கூடுகிறது ரெலோ

ரெலோவின் யாழ் மாவட்ட கிளைக் கூட்டம் இன்று (12) இடம்பெறவுள்ளது. சிவாஜிலிங்கம் மீது கட்சித் தலைமை நடவடிக்கையெடுக்கவுள்ள நிலையில், அதுகுறித்து இன்று பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ரெலோவின் அரசியல் உயர்பீடம் நாளை கூடவுள்ளது. வவுனியாவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியுள்ளமை குறித்து ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வ முடிவுகள் எதனையும் எடுக்காத நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின் தவிசாளர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இதற்கு கட்சியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. மேலும் சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் அவருக்கு எதிராக கட்சி நிச்சயம் நடவடிக்கை எடுக்குமென்றும் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments