கால்நடை வைத்தியர் மீது தாக்குதல்- கண்டனம்

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி‌ தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரச கால்நடை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரச கால்நடை வைத்தியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாண்டியன் குளம் பகுதிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த ஒருவர் வைத்தியர் மீது சரமாரியாக தாக்கியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக  அப்பகுதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்விதமான ஆக்கபூர்மான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இச்சம்பவம் காரணமாக மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் அவ்விடத்தில், சேவையினை மேற்கொள்ள கால்நடை வைத்தியர்கள் தயங்குகின்றனர்.

ஆகவே மேற்படி சம்பவத்தினை அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு உரிய அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வைத்தியர்கள் சேவையாற்றுவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் வட மாகாண கால்நடை வைத்திய அலுவலகங்களின் வாகன பற்றாக்குறை தொடர்பாக வட.மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு எமது சங்கம் தெரியப்படுத்தியிருந்த போதும், அதற்கு இதுவரை தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments