அரசிடம் ஆயுதம் பெற்று முஸ்லிம்களை பாதுகாத்தோம்


1990ம் ஆண்டு புலிகளின் அச்சுறுத்தல் இருந்த போது, முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்றதால் அரசாங்கம் தந்த ஆயுதங்களை கொண்டு இராணுவத்துடன் சேர்ந்து முஸ்லிம்களை பாதுகாத்தோம் என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று(11) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

1990இல் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலின் போது, முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்றபோது, துப்பாக்கிக் குண்டுகளின் மத்தியிலும், கண்ணிவெடிகளின் மத்தியிலும் நின்று அரசாங்கம் தந்த ஆயுதங்களை கொண்டும், பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்தும் மட்டக்களப்பில் முஸ்லிம்களை பாதுகாத்தோம். ஆகவேதான் இன்றும் இந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறோம்.

முஸ்லிம்களிடம் 16 இலட்சம் வாக்குகள் உள்ளன. 2015இல் 12இலட்சம் வாக்குகளை மைத்திரிக்கு அளித்தார்கள். 1 இலட்சம் வாக்கைத்தான் மஹிந்தவிற்கு அளித்தார்கள். 2015இல் பெரும்பாலான 2.5 இலட்சம் வாக்குகளை கொடுத்து நன்மைகளை பெற்ற நாம், 2015இல் மைத்திரி, ரணிலுக்கு 12 இலட்சம் வாக்குகளை கொடுத்து பெற்ற நன்மைகள் என்ன?

19வது திருத்தம் வந்தால் நாட்டிக்கு கேடு, பாரிய அச்சுறுத்தல் என நாம் சொன்னோம். ஆனால் கொண்டு வந்தார்கள். இன்று ஜனாதிபதி உள்ளிட்ட எல்லோரும் சொல்கிறார்கள், 19வது திருத்தம் தவறு என.

நாட்டில் குண்டுகள் வெடித்தமைக்கு காரணம் என்ன? 19வது திருத்தம் தான். ஒரு நாட்டின் பிரதமரை அழைக்காமல், பொலிஸ்மா அதிபரை அழைக்காமல் பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டினால், அது நாடா? 19வது திருத்தத்தினால் நடந்தது இது.

உலகம் முழுவதும் ஜனாதிபதி ஆட்சிமுறை இருப்பது சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பிற்காகத்தான். சஜித்தோ, கோட்டாவோ ஜனாதிபதியாக வேண்டுமென்றால் முஸ்லிம்களிடம் வர வேண்டும். முஸ்லிம் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது.

கடந்தமுறை நானும் மைத்திரியை ஆதரித்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருப்பேன். ஆனால், அரசியலென்பது பதவிகளல்ல. மக்களிற்கு வழிகாட்டுவது.

தேர்தலில் தோல்வியடைந்தேன். அல்லா என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார். தேர்தலில் வென்று வந்த அமீர் அலி, ஹரீஸ் போன்றவர்கள் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய பின்வரிசையில் உட்கார்ந்திருக்க, இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்ய அல்லா என்னை முன்வரிசையில் உட்கார வைத்தார் - என்றார்.

No comments