52 மணி நேரம் கடந்த சிறுவனை மீட்கும் போராட்டம்;

இந்தியா - தமிழகம், திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி வீழ்ந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் இன்று (27) 52 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

52 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நீடித்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில மீட்பு படையினர் இன்று மதியம் மீட்பு பணியில் இணைந்து அதிநவீன உபகரணங்களுடன் குழந்தையை மீட்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, குழந்தை சுஜித்தை மீட்க நீண்ட தாமத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு குழி தோண்டும் ரிக் இயந்திரத்தை கொண்டு வந்து அதனைப் பயன்படுத்தி இன்று (27) 7 மணிக்கு சிறுவன் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் குழி ஒன்று தோண்ட ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் அங்கு பாறைகள் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் 35 அடி வரையில் குழி தோண்டப்பட்டது. அதற்கு மேலும் குறித்த இயந்திரத்தால் குழி தொண்டுவது கடினமாக இருந்தது. இந்நிலையில் பாறையை குடையக்கூடிய ரிக் இயந்திரம் ஒன்று இன்று மாலை சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று மாலை கொண்டு வரப்பட்ட 2 ஆவது  அதிநவீன நிலத்தை துளையிடும் 'ரிக்' இயந்திரத்தை கொண்டு குழி தோண்ட இயந்திரத்தின்  உபகரணங்களை பொருத்தி நிலைநிறுத்த இன்னும் 3 மணித்தியாலங்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்பு வந்த ரிக் இயந்திரம் காலை  7.05 மணி தொடக்கம்  தற்போதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது இதுவரை சுமார் 38 அடிக்கு துளை தோண்டப்பட்டுள்ளது.

இடைக்கிட மழையும் பெய்கின்றது குழந்தை  விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றினை சுற்றி மண் மூட்டையால் அணை போடப்பட்டுள்ளது.

No comments