18 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 18 மீனவர்கள் அண்மையில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்புக்களும் முயற்சியில் ஈடுபட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பாதிக்கப்பட்டவர்கள் உதவிகோரியிருந்தனர்.

இதனையடுத்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கொழும்பு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொண்டு மீனவர்களின் விடுதலை தொடர்பான பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 23ஆம் திகதி யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு மீனவர் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றன. எனினும், போராட்டக்காரர்கள் தூதரகத்தை அண்மிக்க முடியாமல் பொலிஸார் தடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேரும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டு சென்னையிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள், வெளியிட்டுள்ளனர். மேலும் இன்று அல்லது நாளை மீனவர்கள் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments