கோத்தாவை சாய்ந்தமருது பள்ளிவாசல் ஆதரிப்பது முஸ்லிம்களை பாதிக்கும்

நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன், முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், “சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சையாக தனித்துப் போட்டியிட்டது. அதற்கு மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன்மூலம் கல்முனையில் ஏற்பட்ட சரிவை கட்சி தாங்கிக்கொள்ளும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை சாய்ந்தமருதுக்கு கூட்டிவந்து விரோத சக்திகளுக்கு துணைபோனமை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் செயலாகும். அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

சாய்ந்தமருது நகரசபை குறித்து ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தருவதாக வாக்குறுதியளித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.

மாற்று சக்திகள் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்சினையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது. நகரசபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதி ஒருநாளும் பெறுமதியற்றுப்போக முடியாது.

சாய்ந்தமருதில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்களையும் நாங்கள் புறந்தள்ள முடியாது. நாங்கள் பிரிந்துகொண்டு தீர்வுகளை நோக்கி வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியாது. முதற்கட்டமாக நாங்கள் ஒற்றுமைப்பட்டு அதிகாரங்களை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எங்களுக்கிடையிலான அதிகார ரீதியிலான சமன்பாட்டை சரிசெய்துகொள்ள முடியும்.

இந்த விடயத்தில் நாங்கள் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுவதே அரோக்கியமான விடயமாகும்” என்று தெரிவித்தார்.

No comments