ஆறு மாதத்தில் செய்து முடித்தோம்

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். சர்வதேச விமான நிலையம் இன்று (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இன்று யாழ்ப்பாணத்திற்கு சிறந்த தினமாகும். யாழில் முதல் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக யுத்தத்திற்கு முன்பாகவிருந்தே பேசப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த விடயம் தொடர்பாக கடந்த வருடம் ஏப்ரல் மாதமே கலந்துரையாடப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகள் இவ்வருடத்தின் மே மாதத்திற்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து இதை செய்ய முடியுமா என கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால் இதனை செய்து முடிக்க முடியுமென்று நாங்கள் தீர்மானித்தோம்.
அதற்கமைய 6 மாதத்திற்குள் இன்று யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச விமான நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளோம்.
இது முதற்கட்டமே இதனையடுத்து இந்த விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதன் பின்னர் இந்தியாவைப்போன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும்
இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு டொலர்களில் கோடிக்கணக்கில் செலவிடவில்லை. இந்த விமான நிலையத்தை நிர்மாணிக்க செலவிட்ட பணத்தை ஒரு வடத்திற்குள் பெற முடியும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
0Shares

No comments