மீண்டும் குடும்ப ஆட்சியால் நாட்டை அழிக்க முயற்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து இந்த நாட்டை சீர்குழைக்க பார்க்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை காரியாலயத்தில் இன்று (01) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை ஒரு ஏணியாக பயன்படுத்தி ஆட்சி பீடம் ஏற முயற்சிக்கின்றனர். கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பது போன்று கபட நாடகம் ஆடிய பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

ஆனாலும், தனித்துவமான தான்தோன்றிதனமாக செயல்படும் விதமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

வெறுமனே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடைய வாக்குகளை பெற்றுக் கொண்டு அவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியிட முயற்சிக்கின்றனர்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க போவதில்லை.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்சவின் பெயர் இடப்பட்டிருந்தாலும் கூட அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக பதவி வகிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் பெயர் இடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நிதி அமைச்சராக பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்ட பசில் ராஜபக்சவின் பெயர் இடப்பட்டுள்ளது. சபாநாயகராக சமல் ராஜபக்சவை நிறுத்த தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

இது போன்ற ராஜபக்ச வம்சத்தை சார்ந்த பலர் ஆட்சியில் அதிகாரம் மிக்க பதவிகளை வகிப்பதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

எனவே இங்கு பொதுஜன பெரமுன பெயருக்கு ஒத்ததான எந்தவொரு செயல்பாடும் அங்கு காணப்படவில்லை.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு போதும் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு அடிப்பணிந்து அவர்கள் சொல்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து இந்த நாட்டை சீர்குழைக்க பார்க்கின்றமை தெளிவாக தெரிகின்றது.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றிப்பெற கூடிய சஜித் பிரமேதாசவிற்கு ஆதரவு வழங்கி மீண்டும் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.

No comments