இன முரண்பாட்டை தடுக்கவே தேரர்களின் அடாவடிக்கு இடமளிப்பாம்

இன முரண்பாட்டை தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்பை கவனத்தில் கொள்ளவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணி பகுதியில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை மற்றும் பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்தமாதம் 25ம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும், தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணை வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்றிருந்தது. இதன்போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

குறித்த விசாரணையில் ஆலயத்தின் நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டதரணி ந.அனிஸ் கருத்து தெரிவிக்கையில்,

“குறித்த சம்பவத்தில் நீதிமன்றின் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதனை பொலிஸ் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் நீதிமன்றின் கட்டளையை அமுல்படுத்துவதை விட இன முரண்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதில் கவனம் செலுத்தியதாக அவர்களால் சொல்லப்பட்டது. அத்துடன் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்று வருகை தந்திருந்த பௌத்த தேரர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்” என்றார்

No comments