கிடைத்து ஜாமீன்! ஆனால் வெளியே வரமுடியது;

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவர் அமலாக்கத்துறையின் காவலில் இருப்பதால் தற்போதைக்கு அவர் சிறையில் இருந்து வெளிவர மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அரசியல் பழிவாங்குதல் காரணங்களுக்காக தன்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில்,  பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரம் ரூ. 9.96 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மேலும், பீட்டர் முகர்ஜி, முன்னாள் நிதி ஆயோக் தலைவர் சிந்துஸ்ரீ குல்லர், ஐ.என்.எக்ஸ். மீடியா, ஐ.என்.சி. நியூஸ், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அட்வான்டேஸ் ஸ்ட்ராடஜிக் கல்னல்டிங், முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய அரசு அதிகாரிகள் அஜித் குமார் டங்டங், ரவிந்திர பிரசாத், பி.கே.பக்கா, பிரபோத் சக்சேனா, அனூப் கே புஜாரி, சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் எஸ். பாஸ்கர ராமன் ஆகியோரும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனர். குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், லஞ்சம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

No comments