நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம்! மிக ஆழமாக பேசியுள்ளோம்;

தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சென்னை முதல் மாமல்லபுரம் வரை, தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சீன அதிபர் ஜின்பிங், தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது, என்னை நெகிழ வைத்து விட்டது என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்திய பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு இன்று 2வது நாளாக கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய ஜின்பிங்,  இந்தியா வந்ததில் எனக்கு மிகுந்த  மகிழ்ச்சி. தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின்
விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது. என்னுடன் வந்த அதிகாரிகளும் இதை உணர்ந்தனர். இதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வாழ்க்கையில் மாமல்லபுரம் ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்றும், பல இனிமையான நினைவுகளை மாமல்லபுரம் பயணம் எங்களுக்கு தந்துள்ளது என்றவர், என்னை போன்றே எமது நாட்டு அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம் மறக்க முடியாதபடி இருக்கும் என்று கருதுகிறேன். என்றார்.

தொடர்ந்து பேசியவர் பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்களாகிவிட்டோம், நாங்கள் இருவரும் நேற்றும், இன்றும் மனம்விட்டு பேசினோம். அது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து இரு நாடுகளின் உறவு மேம்படபாடுபடுவோம். தற்போது,  நாங்கள் இருவரும் மிக ஆழமாக பேச்சு நடத்தி உள்ளோம். இந்த பேச்சு வார்த்தைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்றார்.

எங்களின் சந்திப்பால் இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருவதாக கூறியவர் மாமல்லபுரம் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக  நிச்சயம் அமையும் என்றும்,  இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று ஜின்பிங்கூறியுள்ளார்.

No comments