மன்னாரில் வெள்ளத்தால் 85 குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டதில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இது வரை 85 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்.

மன்னாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர் வடிந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துள்ளது.

குறிப்பாக ஜீவபுரம், ஜிம்றோன் நகர், சாந்திபுரம், எமில் நகர் சாவற்கட்டு, எழுத்தூர் போன்ற பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதன் காரணமாக மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் மன்னார் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் என்பன மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதேச செயலகத்தின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்ளில் அதிகளவானவர்கள் சிறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினர் என்பதுடன் தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் தாழ்நிலக் கிராமங்களில் வசிக்கு ஏனைய மக்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments