மருந்து வழங்குநரின் இடமாற்றத்தை நிறுத்த கோரி போராட்டம்

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குநர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அப்பிரதேச மக்கள் இன்று (07) ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு இன்று வரை நிரந்தர வைத்தியர் இல்லை. இந்த நிலையில் குறித்த சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குநர் திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார். பதில் கடமைக்கு ஒரு மருந்து வழங்குநர் நியமிக்கப்படாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டமையினை மக்கள் கண்டித்துள்ளனர்.

உடனடியாக உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமான வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் எனக்கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்காத பட்சத்தில் முருங்கன் வைத்தியசாலைக்கு 7 கிலோ மீற்றர் தூரமும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 14 கிலோ மீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments