தமிழர்களை ஐதேக பழிவாங்கியது முதலை கண்ணீர் வடிக்கும் மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியை ஏற்படுத்த மிகவும் உதவிய தமிழர்களையே பழிவாங்கினார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வேறு எந்த தலைவரையும் விட அதிகமாக யாழ்ப்பாணம் வந்தது நான் தான். முழு நாட்டு மக்களும் யாழிலிருந்து கொழும்பு செல்லவும், கொழும்பிலிருந்து யாழ் வரவும் ஆவணம் செய்தவர்கள் நாம் தான்.

யாழ் மக்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. 1970களிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். அந்த காலத்திலே நாம் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடன், துரையப்பா காலத்தில் இங்கு வந்தோம்.

வடக்கிலே சிறிமா காலத்தில் விவசாயிகளிற்கு நல்ல காலமிருந்தது. சிறிமாவோவை விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். வடக்கிலுள்ள மீனவர்களிற்கும் அப்போது விவசாயமிருந்தது. 1978இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வசதிகளை வடக்கு மக்களிடமிருந்து பறித்து விட்டது.

அந்த ஆட்சியை எற்படுத்த மிகவும் உதவிய தமிழர்களையே பழிவாங்கினார்கள். வடக்கு மக்களின் ஜனநாயகத்தை பறித்தார்கள். இளைஞர்கள், விவசாயிகளை வீதிக்கு இழுத்து விட்டார்கள்.

யாழ் நூலகத்தை எரித்தது உங்களிற்கு நினைவிருக்குமோ தெரியாது. அபிவிருத்தியை வேகமாக சீர்குலைத்தனர். அந்த பெறுமதியான நுலகத்தை எரித்ததை முழுமையாக ஐ.தே.க பொறுப்பெடுக்க வேண்டும். அதன்பின் நடந்ததை நான் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை.

ஏ9 வீதி மூடப்பட்டது. வெளிநாட்டு படைகள் இலங்கைக்கு வந்தனர். யுத்தம் 30 வருடம் நடந்தது. முழு நாடும் அகதி முகாமாக மாறியது. இங்கு மட்டுமல்ல தெற்கிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. ஏ9 வீதியை திறந்து, வீதிகளை, பாலங்களை புகையிரத நிலையங்களை அமைத்து நாம் வசதியை ஏற்படுத்தினோம். மின்சார வசதியேற்படுத்தினோம்.

வடமாகாணசபை இருந்ததால் வேலைகள் நடந்ததா என தெரியாது. ஆனால் உங்களிற்கு அதை பெற்றுத்தந்தோம். உங்களிற்கு தேவையான அனைத்தையும் சலுகைகளாகவும், உரிமைகளாகவும் பெற்றுத்தந்தோம்” என கூறினார்.

No comments