தேசிய பாதுகாப்பை சீரழித்து விட்டனர்

தற்போதைய அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தநிலையில் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை கடுகளவும் கவனத்தில் கொள்ளாது இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.
அவர் கூறுகையில், “நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது உங்களுக்கு நினைவிலிருக்கும். மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதம் எந்த வகையிலும் நாட்டில் தலைதூக்காதவாறு தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் சீரழித்து விட்டது.
மறுபுறம் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களாக செயற்படும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராணுவத்தின் கௌரவத்தை சீரழித்து விட்டனர். புலனாய்வுத் துறையினர் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலிட்டனர்.
புலனாய்வுத் துறை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட துறைகளை தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே செயற்படுத்தினோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கவே இந்த துறைகளை பயன்படுத்துகின்றது. எனவேதான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது.
ஆகவே இவை எமது ஆட்சியில் சீர்செய்யப்படும். நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments