பிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று
(06.10.2019) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வரேவேற்புரையினை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார்  அவர்கள் ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து 2019 தமிழ்மொழித் தேர்வுகள் தொடர்பான  விளக்கத்தோடு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத் தேர்வுப் பொறுப்பாளர் ஆசிரியர் திரு. அகிலன் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்தார்.
'ஆசிரியவாண்மை" பற்றி ஆசிரியை திருவாட்டி கமலாவதி  அவர்கள் சிறப்பாக விளக்கியிருந்தார்.

எழுத்துக்கள், விளையாட்டுமுறைக் கற்பித்தல் தொடர்பில் ஓர் ஆற்றுகையை ஆசிரியை திருவாட்டி கிருஷ்ணசொரூபி அவர்கள் திறம்பட ஆற்றியிருந்தார்.

'கற்பித்தல் நுட்பம்" என்னும் தலைப்பில் பேராசிரியர்  கலாநிதி தனராஜா அவர்கள்  மிகவும் சிறப்பாக காணொளிகளுக்கு ஊடாக அழகாகத் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.

வரலாறு பகுதியில் கீழடி தொடர்பாக பயிற்றுநர் திரு.கி.தவராஜா அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக சிறப்பாக விளக்கமளித்திருந்தார்.
'பலுக்குதல்" என்னும் தலைப்பில் பயிற்றுநர் திரு.வி.பாஸ்கரன் அவர்கள் ஏனைய மொழிகளின் பலுக்குதலோடு ஒப்பிட்டுத் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.

எழுதுதல் தொடர்பில் பயிற்றுநர் திருமதி உதயராணி அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக மிகவும் சிறப்பாக தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆரம்ப இலக்கணம் தொடர்பில் பயிற்றுநர் திருவாட்டி சோ.சர்வேஸ்வரி அவர்கள் கையேடுகளை வழங்கி மிவும் சிறப்பாக செயலமர்வை நிகழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து ஆசிரியர்கள் தமது கற்பித்தலில் தாம் கொண்டுள்ள சந்தேகங்களை கேட்க, அதற்கு செயலமர்வை நடாத்திய பயிற்றுநர்கள் பொருத்தமான பதில்களை வழங்கியிருந்தனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரைநிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில், தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் ஆசிரியர்களின் பங்கு என்பதும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. அவ்வாறான ஆசிரியர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளில் தங்கள் மாணவர்களை  பங்களிக்கச்செய்யவேண்டிய அதேநேரம் நவம்பர் 27 புதன்கிழமை மாவீரர் நாளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வதுடன் மாணவர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது கடமை எனவும் கேட்டுக்கொண்டார்.

வழமைபோன்று இம்முறையும் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியஉணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது. எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு வளர்தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரை தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு சார்சல் பகுதியில் இடம்பெறவுள்ளது.

No comments