இந்திய துணைதூதர் உறுதி மொழி?


யாழ்ப்பாணத்தின் தீவகம் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்.மீனவர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனமும் எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பேரணியினில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

முன்னதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்துக்கு முன்னால், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டிருந்தனர்.பின்னர் அங்கிருந்து பேரணியாக சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரைச் சென்றிருந்தனர்.

வடக்கு ஆளுநர் மேற்குலகிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.செல்வநாயகத்தைச் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அவர்கள் கையளித்திருந்தனர். 

பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்ற அவர்கள்; தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடும் நோக்குடன் தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றிருந்தனர்.

இதன்போது, பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் துணைத்தூதரக அதிகாரிகளை மாவட்ட மீனவர் சங்கப் பிரதிதிகளும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தவர்களும் இணைந்து சந்தித்துக் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

No comments