குண்டுத் தாக்குதல் தடுக்க தவறியவராக சிறிசேன அடையாப்படுத்தப்பட்டார்

"ஜனாதிபதி சிறிசேன பல சந்தர்ப்பங்களில் சரியான தலைமைத்துவத்தை வழங்கத் தவறி விட்டார். தேசிய பாதுகாப்புச் சபை கூட்டங்களில் இருந்து முக்கிய நபர்களை வெளியேற்றியது, அசாங்கத்தையும், சிஸ்டங்களையும் கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்தினார். அரசியலமைப்பு நெருக்கடியால் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டது" என்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவு குழு தமது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த இறுதி அறிக்கை நேற்று (23) நாடாளுமன்றில் கையளிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

மேலும்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முரண்பாடான கூற்றை முன்வைத்து தெரிவுக்குழுவை “வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார்” என்றும் தெரிவுக்கு குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த விமானங்கள் அனைத்தினதும் இருக்கைகள் நிரம்பியிருந்ததால் தாக்குதல் நடந்ததும் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லையென மைத்திரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். தாக்குதலிற்கு மறுநாள்- ஏப்ரல் 22ம் திகதி- நாடு திரும்பியிருந்தார். ஆணால சிறிலங்கன் ஏயார்லைன்சில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஏப்ரல் 21 சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்த 3 விமானங்களில் இருக்கைகள் இருந்தது தெரிய வந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து திரும்ப, அந்த நாட்டு அரசாங்கம் சிறப்பு விமான சலுகையை வழங்க தயாராக இருந்தபோதும், ஏற்கனவே அவர் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் திரும்ப முடிவு செய்து, சலுகையை நிராகரித்திருந்தார். ஆனால் அவர் உடனடியாக நாடு திரும்பியிருக்க வேண்டுமென தெரிவுக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்து அரச புலனாய்வுத்துறை தலைவர் நிலந்த ஜெயவர்த்தன, தாக்குதல்களை தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை ஏற்க வேண்டுமென்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ம் திகதி இது தொடர்பாக அவர் உளவுத்துறை எச்சரிக்கைகளைப் பெற்றிருந்தார். ஆனால்இது சம்பந்தப்பட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களிடையே பகிர்ந்து கொள்ளத் தவறிவிட்டார்.

ஏப்ரல் 9 ம் திகதி பாதுகாப்பு செயலாளரால் புலனாய்வு ஒருங்கிணைப்பு கூட்டம் அழைக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக சுருக்கமாகக் கூறவும் ஜெயவர்தன தவறிவிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2018 இல், அரச புலனாய்வுத்துறை பணிப்பாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தின் பின், சஹ்ரான் தொடர்பான விசாரணைகளை மற்ற புலனாய்வு முகவரமைப்புக்கள் குறைத்திருந்தன. அதன்படி, சஹ்ரானை விசாரித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) திரும்பப் பெறப்பட்டது. அரச புலனாய்வுத்துறையே சஹ்ரானை புலனாய்வு செய்த ஒரே அமைப்பு ஆனது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரு வருடம் சஹ்ரான் தொடர்பான விசாரணையை அரச புலனாய்வுத்துறை பொறுப்பேற்றுள்ளது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் துறை ஆகியவை பொறுப்புக்கூற வேண்டிய பிற நிறுவனங்களில் அடங்கும். பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களில் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் புஜித் ஜெயசுந்தர, தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் இராணுவ புலனாய்வு இயக்குநரகம் ஆகியனவும் பொறுப்புக்கூற வேண்டிய ஏனைய தரப்புக்களாகும் என்றார்.

காத்தான்குடி மற்றும் பல உள்ளூர் முஸ்லீம் குழுக்கள் சஹ்ரானுக்கு எதிராக 2013/2014 முற்பகுதியில் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகளை அளித்தன என்று அறிக்கை குறிப்பிட்டது. வஹாபிசத்தின் பரவல் மற்றும் காத்தான்குடியின் அரபுமயமாக்கல் ஆகியவை இஸ்லாமிய சமூகத்தில் குறிப்பாக கிழக்கில் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தன என்பது தொடர்பாக மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன தமது கடமைகளில் இருந்து தவறியதாகவும் தெரிவு குழுவில் முறையிடப்பட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது விசாரணை முடிவில் தெரிவுக்குழுவினால் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டுமென சில பரிந்துரைகள் வழங்கியுள்ளது.

அவை வருமாறு,

- பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் அத்தியாவசிய சீர்திருத்தங்கள்,
- மேம்பட்ட நிதி மேற்பார்வை பொறிமுறையை நிறுவுதல்,
- மத தீவிரவாதத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டிய அவசியம்,
- நீதியுடன் தாமதங்களை நிவர்த்தி செய்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தை சீர்திருத்துதல்,
- வஹாபிசம் தொடர்பாக நடவடிக்கையெடுத்தல்,
- ஊடக அறிக்கையிடல், போலி செய்திகள் மற்றும் பிற விவகாரங்களில் கவனம் செலுத்தல்,
- அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளை பொறுப்புக்கூற வைத்தல்,
- வளர்ந்து வரும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள கல்வித் துறையை சீர்திருத்துவது.

No comments