என்ன செய்வது?கூடி குழம்பும் ஈழம் பிக்பொஸ்

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்புக்களை பிரதான கட்சிகள் கண்டுகொள்ளாதிருக்கின்ற நிலையில் அடுத்து என்ன செய்வதென தமிழ் தரப்புக்கள் திண்டாத்தொடங்கியுள்ளன. 
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் அவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார்.

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக, தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பல்கலைக்கழக சமுகத்தினரும், சிவில், மத தலைவர்களைக் கொண்ட குழுவினரும் உள்ளனர்.
இந்நிலையில் ஐந்து கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய குழுவினர்கள் பிரதான வேட்பாளர்களுடன் சந்திப்புக்களை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரதான வேட்பாளர்களின் போக்குகள், தமிழ்த் தரப்புடன் எந்தவொரு வேட்பாளர்களும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தீர்க்கமான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் தரப்பினர், பொது இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களையும் நாளை 11 மணிக்கு யாழில் சந்திப்பதற்கான அவசர அழைப்பினை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் குறுகிய கால அழைப்பின் காரணமாக அச்சந்திப்பு நடைபெற்றிருக்கவில்லை.
எனினும் அன்றையதினம் சம்பந்தனின் இல்லத்தில் கூடிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் எதிர்வரும் 30ஆம் திகதி யாழில் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பதென்றும் 13அம்சக்கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுப்பதென்றும் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments