சஹ்ரான் காசிம் இலக்கில் இந்திய தூதரகமும்?


கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதியொன்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
21.04.2019 தாக்குதல் தொடர்பாக விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழுவின் அறிக்கை நேற்று(23) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் கிடைத்துள்ள புலனாய்வு அறிக்கைகளின்படி இந்தியத் தூதரகமும் வாய்ப்புள்ள இலக்குகளில் ஒன்றாகவிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் ஏப்ரல்-09 ஆம் ‘உயர் இரகசியம்’ என, காவல்துறை மா அதிபர், மற்றும் தேசிய புலனாய்வு தலைவர், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் காசிம் தேவாலயங்கள், இந்தியத் தூதரகத்தை இலக்கு வைத்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
எனினும் பாரிய தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளான ஏப்ரல்-20 ஆம் திகதி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் ஒரு தகவல் மூலத்திடமிருந்து “வட்ஸ் அப்“ மூலம் தகவலொன்றைப் பெற்றார்.
அதில் ஏப்ரல்- 21 அல்லது அதற்கு முன்னர் எந்த நேரத்திலும் அவர்கள் இலங்கையில் தாக்குதலை நடாத்துவதற்கான வாய்ப்புள்ளது என்று அறியப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு இடங்களில், ஒரு தேவாலயம் மற்றும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கும் விடுதி ஆகியவை அடங்கும். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாக்குதல் நடந்த தினமான ஏப்ரல்-21 ஆம் திகதி காலை-08.27 மணியளவில் அரச புலனாய்வுச் சேவை மீண்டும் செய்தியைப் பெற்றது. காலை-06 மணிக்கும் முற்பகல்-10 மணிக்குமிடையில் கொழும்பிலுள்ள மெதடிஸ்த தேவாலயமும் இலக்குகளிலொன்று என அதில் கூறப்பட்டிருந்ததாகவும் தெரிவுக்குழு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments