நாட்டின் சட்டம் ஜனாதிபதிக்கும் பொருந்தும்

நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) கொழும்பில் வெளியிடப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கக்கூடியதும், இலஞ்ச ஊழல் இல்லாததுமானதொரு நாட்டை உருவாக்க வேண்டும். அத்தோடு, மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தக்கூடியதொரு அரசாங்கத்தைத்தான் நாம் ஸ்தாபிக்க வேண்டும்.

இவற்றை மேற்கொள்ளாமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்த, திருடர்கள் அதிகாக இருக்கின்ற, முரண்பாடுகளும் பிரச்சினைகளும் காணப்படும் ஒரு நாட்டால் எந்தக் காரணம் கொண்டும் முன்னேற முடியாது. எனவே, இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும்.

இதற்கேற்ற வகையில், சட்டத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். இங்கு மக்கள் துன்பப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் இன்றைய நிலைமையாகும். இவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் வகையிலான அரசாங்கமொன்றை நாம் உருவாக்க வேண்டும்.

எமக்கு புதிய அரசியல் கலாசாரம் ஒன்று அவசியமாகும். மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது இராணுவத்தினரின் வேலை அன்றி, அரசியல்வாதிகளின் பிரதான செயற்பாடாகவே நாம் கருதுகிறோம். அனைத்து இன மக்களும் இந்த நாட்டில் ஐக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டிய பொறுப்பை நாம் ஏற்படுத்துவோம் என மேலும் தெரிவித்தார்.

No comments