தமிழ் மீது குதிரை ஓட்டும் சமற்கிருதம்! கொதிப்படைகிறார் மலேசியத் தமிழறிஞர்;

சமற்கிருதம் தமிழின் மீது ஏறி குதிரை ஓட்டுவதின் வாயிலாகத் தமிழைச் சிதைக்கப்படுவதாக மலேசிய தமிழறிஞர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மலேசிய ஆசிரியர்களுக்கான இலக்கிய அமைப்பின் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய  மலேசியத் தமிழ்நெறிக் கழக தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் , கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட  ஆசிரியர்கட்கு தமிழ் மொழி குறித்து விளக்கவுரை கொடுத்துள்ளார்.

19-21 /09/2019 மூன்று நாள்களாக கோலாலம்பூர் டைனாசிட்டி விடுதியில்  நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேசுகையில்:-

சமற்கிருதம் தமிழின் மீது ஏறி குதிரை ஓட்டுவதின் வாயிலாகத் தமிழைச் சிதைக்கப் பயன்படுத்தப்படும் மொழியாகும். பேச்சு வழக்கற்ற ஒரு மொழியாகவும் இறந்து பட்ட மொழியாகவும் விளங்கும் சமற்கிருதத்தைப் பயன்படுத்தி தமிழை அழிக்க முனைகிறார்கள் என்றால் அதனை என் போன்ற தமிழுணர்வாளர்கள் எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
சமற்கிருதம் தேவமொழியாகவும் பூசுரர்கள் மொழியாகவும் அடிமைத் தமிழர்களாலேயே கருதப்படுகின்றமையால் நம் தாய்மொழியாம் தமிழைத் தற்காக்கும் என் போன்றவர்களை இறைமறுப்பாளர்கள் என்றும் மத எதிர்ப்பாளர்கள் என்றும் புறமொதுக்க முனைகின்றனர்.

தமிழில் கடவுள், இறை, தெய்வம் முதலான சொற்கள் நுட்பப் பொருளுடையவை. வேர்ச்சொல் அறிந்தவர்களாலேயே இவற்றிற்கான மெய்ப்பொருள் விளக்கங்களை வழங்க முடியும். இதுபற்றிய விளக்கங்களை அறிய என்னிடம் நேரடியாக வாருங்கள். நான் தெளிந்த விளக்கத்தை வழங்குகின்றேன்.

பெரியார் போலும் பெருமக்களை இறைமறுப்பாளர் என்ற அளவில் மட்டும் பார்க்கக் கூடாது. பெண்ணுரிமைக்காக ஆணாதிக்கத்தை எதிர்த்து மிக வலிந்த குரல் கொடுத்தவர் பெரியார். ஒரு காலத்தில் பெண்கள் படிக்க முடியாது. ஆண்களுக்குச் சரிநிகராக நாற்காலியில் உட்கார முடியாது. நடுவில் வந்து கருத்துரைக்க முடியாது. குழந்தைத் திருமணம் அதிகம் செய்து வைக்கப் பெற்றது. பெண்களில் ஒரு பிரிவினர் கோயிலில் பொட்டுக் கட்டி விடப்பட்டனர். இத்தகு அடிமைத்தளை அறுத்தெறியப்படப் போராடியவர் பெரியார். ஆரிய வருணாச்சிரம சனாதன கொடுமை அந்த அளவுக்குத் தமிழினத்தை ஆட்டிப்படைத்தது. அதனால் தமிழ் சூத்திரமொழி என்றும் நீச மொழி என்றும் புறமொதுக்கப்பட்டது. அதை எதிர்ப்பதற்குத் தமிழர்க்கு இன்றளவும் துணிவில்லை. மந்திரம் எனச் சொல்லிக்கொண்டு வீட்டு நிகழ்ச்சிகளிலும் கோயில்களிலும் வடமொழியை எதிர்க்கத் திராணியற்றவர்களாகிக் கிடக்கின்னர்.

தமிழாசிரியப் பெருமக்கள் மிகத்துணிவுடையவர்களாகத் தூயதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். சிலர் குமுகாயம் போன்ற சொற்களை என் போன்றோர் பயன்படுத்துகின்ற போது அது என்ன குமுகாயம் ; புரியாத , இல்லாத சொற்களை யெல்லாம் தமிழில் புகுத்துகின்றார்கள் எனக் குறைபட்டுக்கொண்டார்கள். உண்மையில் தமிழின் வேர்ச்சொல் அறிந்தவர்களாக இருந்தால் இப்படிப் பேச மாட்டார்கள் .
சமுதாயம் என்ற சொல்லைத் தவிர்த்து, பாவாணர் தாம் குமுகாயம் என்ற சொல்லை வழக்கிற்குக் கொணர்ந்தார்.
சம் என்பது வடமொழிக்குச் சென்று  திரிபடைந்த வேராகும். தமிழில் கூடல் கருத்தின் அடிப்படையில் உல்>குல்> கும்> குமுகு > குமுகாயம் என்றே வருதல் வேண்டும். கூடல், சேர்தல், திரளல் பொருளில் கும் எனும் வேர் அமையும். இவ்வாறே கும்மு எனுஞ் சொல்லும் உருவாகியது. உடல் திரண்டு தடித்தவரை கும்மு என்பர். இச்சொல்லே மலாயில் கெமுக் , Gemuk என்றிருக்கிறது. குமரன், குமரி முதலான சொற்களும் இவ்வாறான திரட்சிப் பொருளில்தான் அமைந்தன.
கும் எனும் தமிழ் வேர் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் chum என மாறி ஆங்கிலத்தில் Sum என வழங்குகின்றது. இது சம் என அழைக்கப்படும். சம் எனில் திரட்சி, மொத்தம் எனப் பொருள்படும். இதுவே வடமொழியிலும் சம் என வழங்கப்பட்டு சற்று தமிழ்வடிவம் பெற்று சம் > சமுகம் என்றும், சம்> சமுதாயம் என்றும் மாறியது. இத்தகு வேர்ச்சொல் அறிவாராய்ச்சி இருந்தால் ஒரு சொல் தமிழா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளலாம். நான் ஏன் சமுதாயம் என்று சொல்லாமல் குமுகாயம் என்று சொல்கிறேன் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்””

இவ்வாறு பல்வேறு கருத்துகளையும் வேர்ச்சொல் விளக்கங்களையும் மலேசிய ஆசிரியர்க்கான இலக்கியக அமைப்பின் கருத்தரங்கில் திருமாவளவன் பகிர்ந்து கொண்டார்.

No comments