சஜித்துடன் பேச தயாராகும் கூட்டமைப்பு?

தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். 
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய ஐந்து தமிழ் கட்சிகளும் இந்த வாரத்தில் கூடி ஆராயவுள்ளோம். எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் இந்த வாரத்தில் ஒரு தினத்தில் நாம் ஐந்து கட்சிகளும் கூடி ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எட்டுவதுடன் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளோம்.
எம்முடன் பேச தயாராக உள்ள கட்சிகளையும் சந்தித்து நிலைப்பாடுகள் குறித்து ஆராய்வோம். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது கோரிக்கைகளை ஆராய்ந்துள்ளாரா  என எமக்கு தெரியவில்லை. ஆனால் எம்முடன் பேச தயாராக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே நாம் அவருடன் பேசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

No comments