சுஜித் உன் புனித ஆன்மா சாந்தி கொள்ளட்டும்...!

ஆறாத வலி வந்து ஆழ் மனதை கொல்லுதையா!
வேண்டாத சாமியில்ல பாவி மனம் தவிக்குதையா!

தீராத துன்பம் ஏனோ நெஞ்சிலே குடி கொண்டதையா!
மீண்டுவர வேண்டுமென்று ஊர் உலகம் கதறுதையா!

ஒத்தையில் நீ ஒளிஞ்சு விளையாடினாலே
துடிதுடிக்கும் என் மனசு
ஒருத்தரும் இல்லா குழிக்குள்ளே எத்தனை நாள் நீயும் தவிச்சிருப்ப..!

இருண்ட நிழலை பார்த்து முந்தானையில முகத்தை மூடி நிற்ப
இருள் மட்டும் குடிகொண்ட குழிக்குள்ள எப்படி கண்ணே நீ இருப்ப...!

தள்ளிக் கொஞ்சம் படுத்தாலே தூக்கத்தில என்னைத் தேடுவியே!
தன்னந்தனியா அந்த கிணற்றில யாரைத் தேடி அழுது தீர்த்திருப்ப..!

அம்மா அம்மா என்றே என்னை நீ கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்திருப்ப
அம்மா பக்கம் இல்லையே எதை நினைச்சு உசிர கையில பிடிச்சிருப்ப..!

தேம்பி தேம்பி அழுதிருப்ப தேற்றிட யாருமில்ல என்றே
சோர்ந்து போய் தூங்கிருப்ப சோறு தண்ணி இல்லாமலே தவிச்சிருப்ப...!

இப்ப காப்பாதுவாங்க நாளை காப்பாத்துவாங்க என்றே
இடிந்து போய் காத்திருந்தோமே!
இடி போல இறங்கியதே உந்தன் செய்தி

இந்தியா வல்லரசு ஆகும் என்றே சொல்லுறாங்க - ஆனால்
மண்ணுக்குள் புதைந்த குழந்தைய தூக்கிட
தொழிநுட்பம் இல்ல என்கிறாங்க

என்ன செய்ய எங்கள் தங்கமே சுஜித் ஏழையாய் பிறந்தோமே விதி
உன்ன எண்ணி ஏங்கும் நானோ நாடற்ற ஈழத்தமிழன் எனும் நாதியற்றவன்

முள்ளிவாய்க்காலில் உன்னை போல பல மழலையரை இழந்தோமே - அந்த
மீளாத வலியை தாண்டி வலிக்குதடா உன்னை இழந்த இந்த கணம்

மூன்று நாளா காத்திருந்திருப்ப மூச்சு வாங்கி வாங்கி மூச்சையாகிருப்ப
மூச்சு முட்ட மண்ணும் நீரும் சேர்ந்திருக்கும் மூச்சை விட்டு நீயும் தூங்கிட்டியே சுஜித்

தலையில் மண் கொட்டும் போதே என்ன என்ன சிந்தனை கொண்டாயோ
தனிமையில் தவிக்கிறோமே யார் வருவார் என்று ஒருகணம் பார்த்தாயோ

உன்ன எண்ணி தூங்க போன தூக்கம் தொலைதூர ஆனதையா
உண்மையில நம் வாழ்வெல்லாம் காற்றிடைவெளி தானையா

உன் ஆன்மா என்னை மன்னிக்குமா

ஞாரே

No comments