தலையை சுற்றி மூக்கை தொடும் கதை?


மூக்கை தலையை சுற்றியே தொடுவது யாழ்ப்பாணத்தவர்களிற்கு தலையெழுத்தாகியுள்ள நிலையில் புதிதாக திறக்கப்படும் விமான நிலையத்திற்கு செல்லவும் வீதியால் சுற்றி அலையும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

கட்டுவன் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை விடுவிப்பபற்கு விமானப்படையினர் மறுப்புத் தெரிவிப்பதனால் மேலதிகமாக பத்து கிலோமீற்றர் தூரம் பயணித்தே குறித்த விமானநிலையத்தை அடைய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான பிரதான நுழைவாயிலாக தற்போது கட்டுவன் மயிலிட்டி வீதியே மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை யாழ்.நகரில் இருந்து செல்லும் மக்கள் அனைவரும் தெல்லிப்பழை சந்தியின் ஊடாக கட்டுவன் சந்தியை அடைந்து அதன் மூலம் மயிலிட்டியை நோக்கிப் பயணிப்பதன் மூலம் இலகுவாக விமான நிலையத்தினை அடைய முடியும்.

இருப்பினும் குறித்த போக்குவரத்திற்கான பாதையை முழுமையாக திறந்துவிடுவதற்கு வெறும் 6 ஏக்கர் நிலமே தடையாகவுள்ளது. இந்த ஆறு ஏக்கர் நிலத்தை விடுவிக்காத காரணத்தினால் பத்து கிலோமீற்றர் தூரம் அதிகமாக பயணித்தே தற்போது விமான நிலையத்தினை அடையும் அவலம் கானப்படுகின்றது. இதன் மூலம் காங்கேசன்துறை வீதியில் காங்கேசன்துறை சந்தியை அடைந்து அதன் பின்னர் பொன்னாலை பருத்தித்துறை வீதிவழியாக மயிலிட்டிச் சந்தியை அடைய வேண்டும். அதன் பின்னர் மயிலிட்டிச் சந்தியில் இருந்து கட்டுவன் சந்தி நோக்கிப் பயணித்தே விமான நிலையத்தினை அடைய வேண்டும்.

No comments