'வாழ் மற்றவரையும் வாழவிடு' என்ற மனோ நிலை சஜித்திடம் இருக்கும்: விக்கியர் நம்பிக்கை


"கொழும்பு றோயல் கல்லூரிக் கல்வியும், அவரின் பௌத்தமதப் பின்னணியும் மேலும் இலண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் வேறு கல்லூரிகளிலும் அவர் பெற்ற கல்வியுமானது அவருக்கு 'வாழ் மற்றவரையும் வாழவிடு' என்ற மனோநிலையைக் கொடுத்திருக்கும்" என்று நம்புகின்றேன் என சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று அவர் அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இதனை தெரிவித்தார்.

அவர் அனுப்பிய கேள்வி பதில் குறிப்பில்,

சஜித்தைத் தேர்ந்தெடுத்தமை எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. அவர் இளம் வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் தாராள மனப்பாங்குடைய ஆரம்பகாலக் கல்வியைப் பெற்றவர். ஆனால் அவர் காலத்தில் வகுப்புகள் மொழிரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. எங்கள் காலத்திலோ சகல இன மக்களும் ஒரே வகுப்பில் இருந்தோம். ஒருமொழி எம்மைப் பிணித்தது (ஆங்கிலம்).தருணசவிய மூலம் இளைஞர்களுடன் அவர் வெற்றி கண்டுள்ளார். ஜனசுவய, சசுனட அருண போன்றவற்றையும் அவர் நடத்தியுள்ளார். அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில்லாத மனோ நிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம். அவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம். அடுத்தது நிருவன மயப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை.

எமது அரசியல் யாப்பானது புத்தரின் போதனைகளை ஆங்காங்கே உட்புகுத்தியிருக்கலாம். ஆனால் நிறுவனப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தமை தவறென்று நான் பலமுறை கூறியுள்ளேன். நிறுவன மயப்படுத்தப்பட்ட பௌத்தம் வேறு, புத்தபெருமானின் போதனைகள் வேறு. முல்லைத்தீவில் பொதுபலசேனா இயற்றிய கூத்துக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றின் குற்றவியல் தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவரின் “இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு” என்ற அதிதீவிர சிந்தனை தடையாக இருக்கலாம். ஆனால் அவர் ஒன்றை நினைவில்க் கொள்ள வேண்டும். இந்தநாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாடு சைவத் தமிழ் நாடாக இருந்தது. பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதே தமிழ் இந்துக்கள் மத்தியில் தான். மேலும் சிங்களமொழியானது நடைமுறைக்கு வந்தது கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. இன்று 2000 ஆண்டுகளுக்கு மேலான தொல்பொருள் சார்ந்த பௌத்த எச்சங்கள் என்று கூறப்படுபவை தமிழ் பௌத்தர்கள் கால எச்சங்கள்.

இன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பதுஉண்மையே. ஆனால் வடகிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு. வடக்கில் இந்து சமயமானது ஆதி காலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளது. அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம். “உண்மை ஒன்று; அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்” என்பதே இந்துமக்களின் கருத்து வெளிப்பாடு. அதனால்த்தான் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின்றார்கள்.

அவரின் தந்தையை நான் அறிந்திருந்தேன். தன் தந்தையாரின் செயலாற்றல் திறமையை மகன் பெற்றிருந்தால் இதுவரையில் “தேசிய அபிமானிகள்” என்ற வகையில் ஆட்சி ஓச்சியவர்களில் இருந்தும் வித்தியாசமான ஒருவராக சஜித் சிறந்து விளங்க முடியும். இதுவரையில் ஆட்சி ஓச்சியவர்கள் அறிவுடைமையையும் உணர்வுடைமையையும் வெளிக்காட்ட முடியாதவர்களாகவே இருந்தார்கள். தன்னால் பின்னப்பட்ட மேற்கூறப்பட்டவலையில் இருந்து சஜித் விடுபட்டாரானால் எல்லா மக்களும் பாராட்டும் அதி சிறந்த ஜனாதிபதியாக வரக்கூடிய தகைமைகள் கொண்டவர்; அவர் என்பது எனது கருத்து. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அண்மையில் கத்திரிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது சிறப்பினை வெளிக்காட்டக் கூடியவர் என்பதே எனது கருத்து - என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments