எனது குழந்தைகள் அச்சத்துடன் இருக்கிறார்கள்: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் தமிழ்ப் பெண் வேதனை

ஆஸ்திரேலிய அரசினால் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதிலிருந்து மீள நீதிமன்றத்தில் போராடி வருகின்றது. இந்த சூழலில், தனது குழந்தைகள் சரியாக உண்ணாமல் அச்சத்துடன் இருப்பதாக பிரியா வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள்(கோபிகா, தருணிகா) பிறந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்தனர். கடந்த மார்ச் 2018ல் விசா காலாவதியாகியதாக கைது செய்யப்பட்ட இவர்கள் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய மக்களிடமிருந்து அனுதாபம் பெறாமல் இருக்கவே இவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மீது குற்றம்சாட்டியிருக்கிறார் நிழல் உள்துறை அமைச்சர் கிறிஸ்டினா கெனியலே. பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தவிட்டு நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவை பாதுகாக்க கோருவதற்கான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. “எனக்கு இலங்கையில் எந்த குடும்பமும் கிடையாது, எனது கணவரின் குடும்பம் மட்டுமே உள்ளது. இலங்கை எங்கள் குடுமப்த்திற்கு பாதுகாப்பான இடம் கிடையாது,” என்கிறார் பிரியா. இக்குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்துவதில் தீவிரமாகியுள்ள ஆஸ்திரேலிய அரசு, சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்த முயன்றது. பின்னர், மெல்பேர்ன் நீதிபதியின் உடனடி தலையீட்டினால் நடுவானில் இந்நடவடிக்கைக்கு தடைவிதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் முடிவு தெரியவரும் வரை இரண்டு வயது குழந்தை தருணிகாவை நாடுகடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு வயது குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரிக்க முடியாது என்ற காரணத்தினால், பிரியா- நடேசலிங்கம் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளது. “கோபிகாவுக்கு இந்த இடமே பிடிக்கவில்லை, அவள் பிலோயலா திரும்பவே விரும்புகிறாள். தருணிகா சரியான உணவு எடுத்துக்கொள்வதில்லை, பயத்துடனே இருக்கிறாள்,” எனக் கூறும் பிரியா, தங்களது தஞ்சக்கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறார். இக்குடும்பத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்குவது எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இக்குடும்பத்தை நாடுகடத்தக்கூடாது என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஆஸ்திரேலிய மக்களின் மனநிலைக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு செயல்படுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இது பொது மனநிலையைப் பற்றியது அல்ல. ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எது உகந்த முடிவு என்பதை பற்றியது,” எனக் கூறியிருக்கிறார் பிரதமர் ஸ்காட் மாரிசன். பிரியா- நடேசலிங்கம் குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவது தற்காலிகமாக நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ள போதிலும், அக்குடும்பத்தின் எதிர்காலம் ஆஸ்திரேலிய அரசின் கையிலேயே இருக்கிறது.

No comments