அமைச்சரவையை கூட்டுமாறு ஜனாதிபதியே கேட்டார் - பிரதமர் பதிலடி


நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதியே கூட்டுமாறு கோரினார் என, விசேட அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் தன்னை சந்தித்து, நிறைவேற்றதிகார ஒழிப்பு வரைபை சமர்ப்பித்ததாகவும், நிறைவேற்றதிகார ஒழிப்பிற்கு அனைத்து கட்சிகளும் தயாராக இருப்பதாக சுமந்திரன் தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 16ம் திகதி, சிவில் சமூக பிரதிநிதிகள் குழு என்னை சந்தித்து எங்கள் அரசாங்கம் என்ன செய்துள்ளது என கேள்வியெழுப்பினர். 20வது திருத்தத்தை ஆதரிக்கும்படி வலியுறுத்தினார்கள். 20வது திருத்தம் பற்றிய அமைச்சரவை முடிவை கேட்டதுடன், நிறைவேற்றதிகார ஒழிப்பு தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டிய வரைபை சமர்ப்பித்தனர்.

சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு நான் சுட்டிக்காட்டினேன், 20 வது திருத்தத்தை மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. எனவே மற்ற அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கும்படி கேட்டேன்.

நிறைவேற்று முறையை ஒழிப்பது குறித்து ஜே.வி.பி உடன் கலந்துரையாடியதாக சுமந்திரன் எம்.பி 17ம் திகதி என்னிடம் கூறினார். 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதெனில், பொதுஜன பெரமுனின் ஆதரவு தேவை என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து எம்.பி. சுமந்திரன் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை யாரும் நிராகரிக்கவில்லை.

19ம் தேதி காலை 8.16 மணிக்கு ஜனாதிபதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 20 வது திருத்தம் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை அழைக்கலாமா என்று அவர் என்னிடம் கேட்டார். இதற்காக சிவில் சமூகம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளதாக நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்தும் சுமந்திரன் எனக்குத் தெரிவித்திருந்தார். எனவே, அமைச்சரவையை அழைத்து விவாதிப்பது பொருத்தமானது என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்தக் கூட்டத்தை அழைப்பது எளிது என்று நான் சொன்னேன். ரவி கருணநாயக்க என்னை அன்று அழைக்கவில்லை.

காலை 9.00 மணியளவில் அமைச்சரவை செயலாளர், எனது செயலாளரை தொடர்பு கொண்டு, அமைச்சரவைக் கூட்டம் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்பிறகு, சிவில் சமூகத்தின் பிரேரணையை தேவைப்பட்டால் பயன்படுத்துமாறுஅமைச்சரவை செயலாளரிடம் எனது செயலாளர் குறிப்பிட்டார்.

நான் மதியம் 2 மணிக்கு அமைச்சர்களை அழைத்து இது குறித்து அவர்களுக்கு அறிவித்தேன். மிக சூடான விவாதம் இடம்பெற்றது. 20 வது திருத்தம் குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்று அனைவரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு, அமைச்சர்கள் மத்தியில் எந்த உடன்பாடும் இல்லை என்று ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை என்றும், அமைச்சரவை பிரேரணையை சமர்ப்பிப்பதில் அர்த்தமில்லை என்றும் கூட்டத்தின் ஆரம்பத்தில் நான் அமைச்சரவை செயலாளருக்கு ஜனாதிபதி முன் அறிவித்தேன். அந்தக் கூட்டத்தில் அமைச்சர்களின் கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறினேன். அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இது பற்றி இறுதி முடிவை அப்பொழுது எடுக்காமல் விடுவது என நாங்கள் முடிவு செய்தோம்.

பிரேரணை தொடர்பாக அமைச்சரவை உறுப்பினர்களிற்கு கேள்வி இருந்தால், அது அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அமைச்சரவை பாரம்பரியத்தை மீறும். நான் யாரையும் அவமதிக்கவோ, குறை கூறவோ மாட்டேன் ”என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நேற்று மாத்தளையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பிரதமர் விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறியிருந்தார்.

No comments