ரணில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு கூட்டமைப்பு முற்கூட்டிய ஆதரவு! பனங்காட்டான்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரணில் என்றால்தான் தமிழர்கள் வாக்களிப்பர் என்ற சுமந்திரனின் அறிவிப்பும், புதிய அரசமைப்பு நிறைவேறாமல் போனதற்கு ரணில் அல்ல மைத்திரியே
முழுக்காரணமென்ற மாவை சேனாதிராஜாவின் முழக்கமும், ரணில் தம்மைத்தாமே வேட்பாளராக அறிவிப்பதற்காக கூட்டமைப்பு முற்கூட்டியே வழங்கியுள்ள ஒப்பமிடப்பட்ட வெற்றுக் காசோலை.

ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்பது தெரியாத நிலையிலும் தேர்தலுக்கான பரப்புரை வேகம் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்ற பெயரில் ராஜபக்ச குடும்பப் பிரதிநிதியாக கோதபாய களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் வேட்பாளராக அனுர குமர திசநாயக்க தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போது இவர்கள் இருவரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக தத்தம் பாணியில் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுபறி முடிந்ததாக இல்லை. ஊரூராகச் சென்று தாமே ஜனாதிபதி வேட்பாளர் என்று பிரகடனம் செய்து வருகிறார் சஜித் பிரேமதாச. இவரைச் சுற்றி மந்திரிகள் கூட்டமொன்று திரிகிறது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரச்சனை எதுவுமே இல்லாதவர்போல வெளிநாட்டுப் பயணத்திலுள்ளார்.

கட்சி உடைந்தாலென்ன தாழ்ந்தாலென்ன அவர் தாம் எடுத்த முடிவில் உடையாத நிலைப்பாட்டிலிருக்கிறார். எந்தச் சந்தர்ப்பத்திலும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிப்பதில்லையென்பதே அவரது உறுதி என்பது நன்றாகத் தெரிகிறது.

இதற்காகவே வேட்பாளர் பெயரை அவர் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதிரடி அறிவிப்பொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது மகாநாடு கடந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெற்றது. இதன் மேடையில் முன்வரிசையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் அமர்ந்திருந்தார்.

இங்கு மைத்திரி தமது தலைமை உரையில், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி போட்டியிடுமென்றும், 2020ஆம் ஆண்டு இக்கட்சியே ஆட்சியமைக்குமென்றும் அறிவித்தார்.

அத்துடன் நிற்காது, மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டவர்களையும், தற்போதைய ஆட்சியின் ஊழல்வாதிகளையும் சிறைக்கு அனுப்பப்போவதாகவும் அறிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இவர் தாம் சூளுரைத்த எதனையும் செய்யத் தவறியவர் என்ற கருத்து நிலையில் பார்க்கையில், இப்போதைய அறிவிப்புகளையும் அது போன்ற வாய்ச்சவடால் என்று எண்ணலாமோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், இவரது இரண்டு அறிவிப்புகளும் மகிந்த தரப்பையும் ரணில் தரப்பையும் சமவேளையில் கலக்கத்துள் தள்ளியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் ஆதரவில்லாமல் கோதபாய வெல்ல முடியாதென்பது மகிந்தவுக்குத் தெரியும். மத்திய வங்கி மோசடியில் அமைச்சர் ரவி கருணநாயக்க தண்டிக்கப்படுவாரானால் அது தமக்கான தோல்வியாகுமென்பது ரணிலுக்குத் தெரியும்.

அதே சமயம், கோதபாயவுக்கு எதிராக சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரி ஒருவரை போட்டியிட இறக்கினால் அவர்களின் மொத்த வாக்கு பிளவுபடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு லாபமாக அமையுமென்ற கணக்கு ரணிலுக்குத் தெரியாததல்ல.

அதே கணக்கை மகிந்தவும் மைத்திரியும்கூட தங்களுக்குள் வைத்திருப்பர்.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறி புதிய கூட்டணியில் போட்டியிட்டால் அது ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியைச் சிதறடிப்பது தங்களுக்கு வெற்றியைத் தரலாமென மைத்திரியும் மகிந்தவும் தனித்தனியே நம்பலாம்.

ஜே.வி.பி.யின் வாக்குகளை சாதாரணமாக எவரும் எண்ணக்கூடாது. மகிந்தவின் பொதுஜன பெரமுன, மைத்திரியின் சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலிருந்து ஜே.வி.பி. பெறும் வாக்கு அவர்களுக்குக் கிடைக்கும் மொத்த வாக்கில் 90 வீதமாக அமையும் வாய்ப்புண்டு.

இப்படித்தான் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுமானால், முதற்சுற்றில் எந்த வேட்பாளரும் ஐம்பது வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாமற் போகும்.

இப்படியான சூழ்நிலையில் சிறுபான்மையினரான தமிழர் - முஸ்லிம்களின் வாக்குகளையே சிங்கள வேட்பாளர்கள் வலம்வர வேண்டியிருக்கும்.

அங்கொன்றும் இங்கொன்றுமான சில்லறைத் தமிழ் தலைகள் தங்கள் ஆதரவை (?) அறிவிக்க ஆரம்பித்து விட்டன. இவர்கள் தமக்கு உதாரணமாக பேய்களையும் பிசாசுகளையும் அழைத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவரின் நேர்த்தியான கொள்கைப் பிடிப்பையும்கூட இப்போது சில சிங்களத் தலைமைகள் ஆராதிக்க ஆரம்பித்துள்ளன.

இவர்களெல்லாம் எந்தளவுக்கு புனிதமான இயக்கத்தினதும் அதன் தலைவரதும் பெயர்களை உச்சரிக்கத் தகுதியானவர்கள் என்பது எப்போதும் கேள்விக்குறி.

தாம் ஜனாதிபதியானால் வடக்கின் பிரச்சனையை தீர்ப்பேனென்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வடக்குக்குள் முடக்க முனைகிறார் கோதபாய.

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக தமிழர் பிரச்சனை பற்றி மறந்தும்கூட வாய்திறக்காதிருந்த சஜித் பிரேமதாச, இப்போது சிங்கள பௌத்த வாக்குகளை சுவீகரிப்பதற்காக இலங்கையில் ஒற்றையாட்சிதான் என்று மேடைகளில் முழங்குகிறார்.

ரணில் விக்கிரமசிங்க வழக்கம்போல அதிகாரப்பகிர்வு மூலம் பிரச்சனைக்குத் தீர்வு என்ற வாய்ப்பாட்டை மறக்காது ஒப்புவித்து வருகிறார். இது, மகிந்த மீண்டும் பதின்மூன்று பிளஸ் தருவேன் என்று கூற ஆரம்பித்திருப்பது போன்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் அணைத்துக் கொண்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கையிலிருந்த காலத்தில் புதிய அரசமைப்பை இழுத்தடித்த மைத்திரியும் ரணிலும் இப்போது ஆளை ஆள் மாறி குற்றம் சுமத்தும் நாடகம் அரங்கேறுகிறது.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்ற மைத்திரிபால சிறிசேன இதுவரை தமிழர் தீர்வு விடயத்தில் செய்யத்தவறிய அனைத்துக்கும் ரணிலே காரணமென்று குறை கூறினார்.

இதற்குப் பதிலளித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புதிய அரசமைப்பு தடைப்பட்டதற்கு மைத்திரிபால சிறிசேனவே முக்கிய காரணமென்று சாடியுள்ளார்.

மைத்திரியும் மகிந்தவும் கூட்டணி அமைத்து சதித்திட்டம் போட்டு நாடாளுமன்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமற் செய்ததாலேயே புதிய அரசமைப்பு நிறைவேறாது போனது என்றும் மாவையர் மேலும் சுட்டியுள்ளார்.

மாவையர் இங்கு குறிப்பிடும் விடயம், கடந்த வருட இறுதியில் ரணிலை ஐம்பத்திரண்டு நாட்கள் பிரதமர் பதவியிலிருந்து இறக்கிய மைத்திரி, அந்தக் கதிரையில் மகிந்தவை அமர்த்தியதே என்பது மறக்க முடியாதது.

ஆனால், இதற்கு முன்னைய வருடங்களில் இந்த நல்லாட்சியில் ரணிலும் சேர்ந்துதான் அரசமைப்பை இழுத்தடித்தாரென்பது மறைக்க முடியாத வரலாறு.

என்னதான் சொன்னாலும், இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லா வேளையிலும் ரணிலையே ஆதரிக்குமென்று இப்பத்தியில் பல தடவை குறிப்பிட்டதை இங்கு நினைவூட்டுவது அவசியமாகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் கூட்டமைப்பின் மூவரின் அண்மைய கருத்துகள் பிரதிபலிக்கின்றன.

கோதபாயவுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்களென்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் அண்மைய நிகழ்வுகளில் அடுத்தடுத்து கூறி வருகிறார்.

ரணில் மீது மைத்திரி சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும் மாவை சேனாதிராஜா ரணிலை பிணையெடுப்பவராக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே ஏறியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், நியூஸ் இன் ஏசியாவுக்கு வழங்கிய செவ்வியில், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ரணிலே சிறந்த வேட்பாளர் என்றும், அவருக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்களென்றும், தமிழர்களின் ஏகபோக தலைவர் தாமே என்ற பாணியில் கருத்துக் கூறியுள்ளார்.

புதிய அரசமைப்பு குறித்த பிரச்சனைக்குத் தீர்வைக் காண ரணில் முயன்றாரென்றும், அதற்கான நகல் வடிவத்தைச் சமர்ப்பித்தவர் ரணிலே என்றும் இவருக்கு சுமந்திரன் இச்செவ்வியில் நற்சான்று வழங்கியுள்ளார்.

ரணில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரென்று அறிவிப்பதற்கு முன்னரே, அவருக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிப்பரென்ற சுமந்திரனின் கூற்றை கூட்டமைப்பின் முடிவாகவே கருத இடமுள்ளது.

ரணிலுக்கு கூட்டமைப்பு வழங்கியிருக்கும் தொகை குறிப்பிடாது ஒப்பமிட்டு வழங்கப்பட்ட காசோலை இது.

சிங்கள வாக்குகள் பல கூறுகளாகப் பிரியுமானால் தமிழர் வாக்குகளை நம்பி ரணில் தம்மைத்தாமே வேட்பாளராக நியமிப்பாரென நம்பலாம்.

இப்போது பந்து ரணிலின் கால்களுக்குள்! அருகில் நின்று இதனை வெற்றிக்குழிக்குள் தள்ள கூட்டமைப்பு முன்வந்துவிட்டது.No comments