ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 33,000 மலேசியர்கள்

சமீப ஆண்டுகளில் 33,000 மலேசியர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் அதில் பெரும்பான்மையானோர் உண்மையான அகதிகள் கிடையாது என்றும் தி மலேசியன் ரிசர்வ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மலேசியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ கோலெட்ஜினோவஸ்கி தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் 10,000 த்திற்கும் மேற்பட்ட மலேசிய நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. “ஆஸ்திரேலிய விசா முறையை தவறாக பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது,” எனக் கூறியிருக்கிறது ஆஸ்திரேலிய எல்லைப்படை.

கனடா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மலேசிய பயணிகளுக்கும் ஆஸ்திரேலியாவில் ETA  விசா எனப்படும் மின்னணு பயண அங்கீகாரம் நடைமுறையில் உள்ளது. இதன் கீழ் 20 டாலருக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய குறுகிய கால விசா எடுக்க முடியும்.

“எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, மலேசியர்கள் ஆஸ்திரேலிய குடிவரவுச் சட்டத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு பெருமளவில் தஞ்சம் கோருகின்றனர்,” என ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஆண்ட்ரூவின் பேட்டியை ஏற்றும் கொள்ளும் விதமாக மலேசிய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள உயர் ஆணையர் ஆண்ட்ரூ, மலேசியாவிடமிருந்து வலுவான அறிக்கை வெளியாகியுள்ளதாக பாராட்டியிருக்கிறார்.

வாரந்தோறும் 20 மலேசியர்களுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் நாட்டினுள் நுழைய அனுமதி மறுப்பதாக கூறப்படுகின்றது. அந்த வகையில், ஜூலை 2017- பிப்ரவரி 2019 இடையிலான காலக்கட்டத்தில் 1,779 மலேசியர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2019ம் ஆண்டின் முதல் பாதியில் தஞ்சம் கோரிய மலேசியர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் வீழச்சியுள்ளதாக ஆஸ். எல்லைப்படை தெரிவித்துள்ளது.

2016- 17ல் பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பித்தவர்களில் 59 சதவீதமானோர் மலேசியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதில் வெறும் 2 சதவீத மலேசியர்களுக்கு மட்டுமே தஞ்சக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments